ஒரு வருடத்தில் 272 மயில்கள் இறப்பு – அதிகாரிகள் விசாரணை

திருச்சி மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 272 மயில்கள் இறந்தது எப்படி என்று மாவட்ட வன அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

மயில் இந்தியாவின் தேசியப்பறவை. பெரும்பாலும் காடுகளில் அதிக அளவில் வசித்து வரும் மயில்கள் வேட்டையாடப்படுவதும், சாலை மற்றும் ரெயில்களில் அடிபட்டு இறப்பதும், விவசாயிகளால் விஷம் வைத்துக் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மயில்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடுகபட்டி என்ற இடத்தில் ஒரு தோப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 மயில்கள் கொத்தாக இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி விவசாயிகள் புகார் செய்ததின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தேசிய பறவையான மயில்களை கொன்றது யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

இது தொடர்பாக திருச்சி மாவட்ட வன அதிகாரி சுஜாதா கூறுகையில் ‘வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்டனையை இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும். மணப்பாறை பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

மயில்கள் பயிர்களை சேதப்படுத்துதாக கூறி விவசாயிகள் மயில்களை விஷம் வைத்து கொல்வது அதிகரித்து வருகிறது. இப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம். எனவே விவசாயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 272 மயில்கள் இறந்து உள்ளன. அவை எப்படி இருந்தன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *