மரம் வெட்டினால் கடும் தண்டனை பசுமை ஆர்வலர்களின் கோரிக்கை

இந்திய பரப்பில், 33 சதவீதமாக இருந்த காடுகள், தற்போது, 22 சதவீதமாக குறைந்துவிட்டன. குறைந்துவிட்ட வனவளத்தை மீண்டும் பெற வேண்டுமெனில், நாடு முழுவதும், 54 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். காடு அழிந்தால், கடல் மட்டம் உயர்வதுடன், புவி வெப்பத்தால் மழை குறைந்து, பல்வேறு பாதிப்புகள், மக்கள் மீது படையெடுக்கும்.எதிர்கால இயற்கை வளத்தை பாதுகாக்கும் ஒரே அஸ்திரம், மரங்கள் மட்டுமே.

 

இத்தகைய தத்துவத்தை உயர்ந்த பசுமை ஆர்வலர்கள், மரக்கன்று நட்டு வளர்ப்பதை, இயக்கமாக நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை காட்டிலும், மரம் வளர்ப்பு ஆர்வம் என்பது ரத்தத்தில் ஊறிவிட்டது. குழந்தை பிறப்பு, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, திருமண விழா, பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா என, ஒவ்வொரு விழாவையும், மரக்கன்று நட்டும் சடங்குடன் துவங்கும் அளவுக்கு, தமிழர் சமுதாயம் நல்ல வழிக்கு மாறி சென்றுள்ளது.
இருப்பினும், பொதுநலனை மறக்கும் சில சுயநலவாதிகளால், மரம் வெட்டுதல் எனும் கொலை நடப்பது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கடந்த வாரத்தில், அண்ணா விளையாட்டு அரங்கம் பின் புறம் ஈ.வே .ரா கல்லூரி அருகே, வளர்ந்திருந்த, மரங்களை மொட்டையாக வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

அதேபோல், சில நாட்களாக பசுமை ஆர்வலர் அறியா வண்ணம், இரவோடு இரவாக, பச்சைப்பசேல் என்று வளர்ந்த மரங்கள், பயமின்றி வெட்டி வீழ்த்தப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி அப்துகல்கலாம், ஒவ்வொரு நபரும், ஐந்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டுமென கூறியிருந்தார். அந்த கடமையை நிறைவேற்றாமல், இயற்கையாக வளர்ந்த மரங்களை வெட்டி, வீழ்த்துவது கொலை குற்றத்துக்கு சமம் என்பதை உணர்த்த வேண்டும். சிலரது சுய நலனுக்காக, மரங்களை வெட்டி வீழ்த்துவது குறித்து, மக்கள் சக்தி இயக்கம் வண்மையாக கண்டிக்கிறது.

சுய நலத்துக்காக மரம் வெட்டினால், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.மின்வாரியம் உட்பட, யார் மரக்கிளைகளை வெட்டுவதாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய்த்துறையில் முன் அனுமதி பெற்ற பிறகே, மரத்தை தொட அனுமதிக்க வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு மற்றம் மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் செலுத்தும் மாவட்ட நிர்வாகம், மரம் வெட்டும் குற்றத்தை தடுப்பதுடன், மரம் வெட்டினால் கடும் தண்டனையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்பதே, மக்கள் சக்தி இயக்கம் , தண்ணீர் அமைப்பு மற்றும் பசுமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *