திருச்சி நகரில் அறிவிக்கப்படாத ஊரடங்கா???

கொரோனா தொற்று பரவல் மற்றும் வெயில் கொடுமையால் திருச்சி நகரில் அறிவிக்கப்படாத ஊரடங்கு போல் சாலைகள் வெறிச்சோடின.

பூங்காக்கள் மூடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதம் கொரோனா முதல் தாக்குதல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது.

பஸ், ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நேரம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது கொரோனா 2-வது அலை முதல் தாக்குதலை விட அதிகமாகி மிக வேகமாக மக்களிடம் பரவி வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக உயர்ந்தது. உயிர் பயம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சினர். இதனால்திருச்சி நகரம் நேற்று அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்று காணப்பட்டது.

திருச்சி நகரில் எப்போதும் அதிகமான போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும் பாலக்கரை மெயின் ரோடு, ஜங்ஷன் மத்திய பஸ் நிலையம் பகுதிகள் நேற்று போக்குவரத்து நெருக்கடி இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் வழக்கம் போல வாகன போக்குவரத்து அதிகம் இல்லை.

தமிழகத்தில் பூங்காக்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று திருச்சி மாநகராட்சியில் நடத்தப்படும் பூங்காக்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இவற்றை பராமரிப்பு செய்பவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இதேபோல சாலையோர கோவில்களிலும் மக்கள் கூட்டம் இல்லை. கோவில்களில் மக்கள் உள்ளே சென்று வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சில கோவிலில் கயிறு கட்டி வைத்துள்ளனர். தூரத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்யும்படி வேண்டுகோள் விடப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவலைத்தடுக்க வருகிற 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் திருச்சி நகரை பொறுத்தவரை வெயில் கொடுமை மற்றும் கொரோனா தொற்று காரணமாக நேற்று பகலில் மக்கள் அதிக அளவில் நடமாட்டம் இல்லாமல் இருந்தது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போல் காட்சி அளித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *