திருச்சி மாநகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

திருச்சி மாநகரில் நள்ளிரவில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதனால் இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை மக்கள் தேடி செல்கிறார்கள். இரவில் கடும் வெப்பத்தால் மின்விசிறி மற்றும் ஏசி போன்ற குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளன.

திருச்சி மாநகரில் பல பகுதிகளில் இரவு நேரங்களிலும், அவ்வப்போது பகல் நேரங்களிலும் கடந்த சில நாட்களாக திடீர், திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மிளகுபாறை, கருமண்டபம், கண்டோன்மெண்ட் உள்பட ஒரு சில பகுதிகளில் இரவு 11.30 மணிக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் 2½ மணி நேரம் கழித்து தான் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

ஏற்கனவே கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இந்த திடீர் மின்வெட்டு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் மக்கள் தூக்கத்தை தொலைப்பதோடு மட்டுமின்றி, திருடர்கள் அச்சத்திலும் தவிக்கின்றனர். பலர் தூக்கமின்றி வீடுகளில் இருந்து வெளியே வந்து வாசலில் அமர்ந்து இருந்தனர்.

கோடைகாலத்தில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *