திருச்சியில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

திருச்சியில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை ; வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை.

புதிய விலையில் உரங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் நடப்பு கோடைகால பருவத்தில் 10,128 எக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியம், தோட்டக்கலை பயிர்கள், காய்கறி பயிர்கள் முதலானவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது திருச்சி மாவட்டத்தில் இப்பயிர்களுக்கு தேவையான 24,189 மெ.டன் மொத்த உரங்கள் இருப்பில் உள்ளன. இதில் 5,456 மெ.டன் யூரியா, 1,288 மெ.டன் டி.ஏ.பி, 4,715 மெ.டன் பொட்டாஷ், 11,334 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள், 891 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உர விற்பனையின் போது புதிய விலையில் விற்பனை செய்தல் கூடாது.

கடந்த 2020-21ம் ஆண்டு விலையிலேயே விற்பனை செய்திட வேண்டுமென மத்திய உரத்துறை தெரிவித்துள்ளதால் உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை ஆதார் எண்ணை பயன்படுத்தி, விற்பனை முனைய கருவி மூலம், உரிய ரசீதுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும். மேலும் அனைத்து உர விற்பனையகங்களில் உரங்கள் மற்றும் இருப்பு விலைப்பட்டியல் ஆகியவற்றினை தகவல் பலகை மூலம் தினமும் தவறாமல் பராமரித்தல் வேண்டும். உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பட்டியலின்றி விற்பனை செய்தாலோ உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *