திருச்சி தில்லைநகரில் ரூ. 15 கோடியில் மாநகராட்சி கட்டடம்

தில்லைநகரில் ரூ. 15 கோடியில் மாநகராட்சி கட்டடம்: விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் திருச்சி மாநகராட்சி சாா்பில் தில்லைநகா் பகுதியில் ரூ. 15 கோடியில் நடைபெறும் 3 மாடி கட்டடப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.

திருச்சி தில்லைநகா் 7 ஆவது குறுக்குத் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் காவல் நிலையங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்களுடன் கூடிய பழைமையான வணிக வளாகம் மிகவும் வலுவிழந்ததால் இதை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது.

இந்நிலையில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் அந்த இடத்தில் 3 தளங்களுடன் கூடிய புதிய பிரம்மாண்ட கட்டடம் அமைக்க கடந்த 2018ஆம் ஆண்டு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கி தொடங்கிய பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

தரைத்தளத்தில் 19 கடைகளும், முதல் தளத்தில் 29 கடைகளும், 2 ஆம் தளத்தில் 6 அலுவலகங்கள் மற்றும் 1 கூட்டரங்கமும், 3 ஆம் தளத்தில் 8 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தரைத்தளத்தில் சுமாா் 50 காா்கள் மற்றும் 50 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வாகன நிறுத்தம் என மொத்தம் 50,972 சதுரடியில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில், உள் அலங்காரம் உள்ளிட்ட பணிகள் முடிந்து அடுத்த சில மாதங்களில் கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *