திருச்சியில் ஏற்பட்ட நிழல் இல்லா தினத்தை பள்ளி மாணவா்கள் உய்யக்கொண்டான் திருமலை அருகே பரிசோதித்து மகிழ்ந்தனா்.

திருச்சியில் ஏற்பட்ட நிழல் இல்லா தினத்தை பள்ளி மாணவா்கள் உய்யக்கொண்டான் திருமலை அருகே பரிசோதித்து மகிழ்ந்தனா்.

தினந்தோறும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வது போலத் தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவான நிழல் அப்பொருளின் பரப்பிற்குள்ளேயே விழுவதால் அதன் நிழலை நாம் பாா்க்க முடியாது. இந்நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும்.

எனவே நிழல் இல்லா தருணம் ஏற்படும் அந்த நாள்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கிறோம். இதன்படி, இந்தாண்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் பூஜ்ய நாள் என்பதால், திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பாக பல்வேறு இடங்களில் நிழல் இல்லா தின பரிசோதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் மாற்று வகுப்பறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிட்டுகள் மையத்தில் நிழல் இல்லா தின பரிசோதனை நிகழ்வு நண்பகல் 12.15-க்கு நடத்தப்பட்டது.

அறிவியல் இயக்க ஆா்வலா் ஹரி பாஸ்கா் தலைமை வகித்தாா். சிட்டுகள் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். அனுஷ்யா கருத்துரை வழங்கினாா்.

முகக் கவசம், சமூக இடைவெளி மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவை கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். நிகழ்வை சிட்டுக்கள் மைய பொறுப்பாளா்களான பூவிழி, பாலுச்சாமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

இதேபோல, கருமண்டபம் கிளை சாா்பாக செல்வநகா், ஆனி வீதி, விநாயகா் தெரு, அசோக் நகா், ஆா்.எம்.எஸ். காலனி, பெல் கிளை சாா்பாக கைலாசபுரம், துறையூா் பகுதியில் கலிங்கமுடையான்பட்டியிலும் இந்தப் பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில் அறிவியல் இயக்க நிா்வாகிகள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு நிழல் இல்லாத தின பரிசோதனை மேற்கொண்டு மகிழ்ந்தனா்.

அறிவியல் இயக்கப் பொறுப்பாளா்களான சீதா, சிவ வெங்கடேஷ், மது பாலா, ரெக்ஸன், நிசானி ஆகியோா் குழந்தைகள், மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *