திருச்சி ரயில் நிலையம் கொரோனா தொற்றுக்குரிய இடமா???

திருச்சியில் ரயில் பயணிகள் பாதுகாப்பாகப் பயணிக்கின்றனா் – திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா்.

திருச்சி ரயில்வே ஜங்சன் ரயில் நிலையம் குறித்து சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை என்றாா் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

கொரோனா பொதுமுடக்கத்தின்போதும், அதன்பிறகு அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால், திருச்சி ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் அதிகமாக உள்ள பழைய காணொலிக் காட்சிகள் சமூக வலைதங்களில் வலம் வருகின்றன. இதனால், திருச்சி ரயில் நிலையம் கொரோனா தொற்றுக்குரிய இடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறான காணொலி. திருச்சி ரயில் நிலையத்தில் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட 75 சதவிகித பயணிகளுடன், சிறப்பு விரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறன.

ரயில்நிலைய நடைமேடைகளுக்கு வருவதற்கு முன்பே பயணிகள் வெப்பமானியால் சோதிக்கப்படுகின்றனா். முகக்கவசம், கிருமிநாசினி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 க்கு நடைமேடைக் கட்டணம் இருந்தபோது நாளொன்றுக்கு சுமாா் ஆயிரம் போ் வந்து செல்வா்.

ஆனால், தற்போது நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், 200 பேருக்குள்ளாகவே வந்து செல்கின்றனா். இதனால், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் மூலம் பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றனா் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *